Archives: ஏப்ரல் 2023

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால். 

சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22). 

நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம். 

போகட்டும் விடு

புனித அகஸ்டினின் “அறிக்கைகள்” என்று வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையானது இயேசுவுடனான அவருடைய நீண்ட பயணத்தை பிரதிபலிக்கிறது. ஒரு சமயம், பேரரசரை புகழ்ந்து பேசுவதற்காக அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரைப் பார்த்து புகழ்ந்து பேசும்போது, அவருடைய அந்த முகஸ்துதி வரிகளை கேட்டு குடிபோதையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் கைதட்டி கேலிசெய்வதைப் பார்த்தார். அந்த குடிபோதையில் இருந்த மனிதன் இப்படிப்பட்ட முகஸ்துதிகள் மூலம் வரும் மேன்மைகளை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, அன்றிலிருந்து உலக வெற்றிகளுக்காகவும் மேன்மைகளுக்காகவும் பிரயாசப்படுவதை நிறுத்திக்கொண்டார். 

ஆகிலும் அவர் இச்சைக்கு அடிமையாயிருந்தார். பாவத்திற்கு அடிமையாயிருக்கும் வரையில் இயேசுவிடத்தில் திரும்பமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தாலும், விபச்சார பாவத்தில் அவர் தரித்திருந்தார். ஆகையால் அவர் “எனக்கு இச்சையடக்கம் தாரும்... ஆனால் உடனே வேண்டாம்” என்று ஜெபிக்க ஆரம்பித்தாராம். 

அகஸ்டின், போதுமான அளவிற்கு பாவத்திற்கும் இரட்சிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையினால் உந்தப்பட்டவராய், ரோமர் 13:13-14ஐ எடுத்து வாசித்தார். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும்… உள்ளவர்களாய் நடவாமல்... துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தது. தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அகஸ்டினுடைய வாழ்க்கையில் இருந்த இச்சையின் சங்கிலிகளிலிருந்து அவரை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு…” கொண்டுவந்தார். “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அகஸ்டின் ஒரு போதகரானார். ஆனாலும் அவர் இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆகிலும் அவ்வாறு சோதிக்கப்படும்போது யாரை நோக்கவேண்டும் என்பதை தற்போது நன்கு அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம் தஞ்சமடைந்தார். நீங்கள் தஞ்சமடைய ஆயத்தமா?

பயன்பாட்டிற்கு உதவாத சிறு கயிறுகள்

மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது. 

பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம். 

இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர். 

தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28). 

தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம். 

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர். 

மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16). 

தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம். 

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி. 

மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார். 

இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.